'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகையானவர் காஜல். இவரை விபசார அழகியாக சித்தரித்து ஒரு கும்பல் வெப்சைட்டில் காஜலின் போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில், 'கால் கேர்ள்' என குறிப்பிடப்பட்டு காஜலின் செல்போன் நம்பர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்து பலர் போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். பலர் காஜலின் செல்போனில் ஆபாசமாகவும் பேசி உள்ளனர்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் பேசிய ஒருவர் உங்கள் போட்டோவை வெப்சைட்டில் பார்த்தேன் என்று கூறி அசிங்கமாக பேசினார். எனது செல்போனுக்கு பலர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். செல்போனில் தொல்லை அதிகரித்ததால் எனது செல்போன் எண்ணை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
எனவே எனது போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் காஜல் கூறியுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காஜல் கூறியதாவது:-
இலவசமாக தகவல்களை வெளியிடும் வெப்சைட் ஒன்றில் கடந்த 23-ந்தேதி அன்று எனது போட்டோவையும், செல்போன் நம்பரையும், யாரோ வெளியிட்டுள்ளனர். இதன் பிறகு பலர் எனக்கு போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். ஒரு சிலர் அருவறுக்கத்தக்க வகையில் என்னிடம் பேசினர். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் துணிச்சலான பெண் என்பதால் இதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெண்களால் இதுபோன்ற தொல்லைகளை தாங்கிக் கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்களாக இருந்தால் நிச்சயம் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார்கள்.
இதுபோன்ற வெப்சைட்டுகளில் பெயர், முகவரியின்றி எந்தவிதமான அவதூறுகளையும், யாரைப்பற்றியும் பரப்பலாம் என்ற நிலை உள்ளது. எந்த வெப்சைட்டாக இருந்தாலும் ஒரு தகவலை வெளியிடுபவரின் பெயர், முகவரியை கட்டாயம் வாங்கிக் கொண்டு அதுபற்றி ஆராய்ந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட வெப்சைட்டுகளில் வெளியிட வேண்டும். இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளேன்.
சைபர் கிரைம் போலீசார் 2 நாட்களில் என்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்தனர்.பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படும் இதுபோன்ற வக்கிர குணம் கொண்டவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று காஜலிடம் கேட்டபோது, நான் அதிகமாக கோபப்படுவேன். இதனால் என் மீதான கோபத்தில் யாராவது இப்படி செய்து விட்டார்களா? என்பது தெரியவில்லை என்றார்.
No comments:
Post a Comment