மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தம்மை கொல்ல வெளிநாட்டு சக்திகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாவோயிஸ்டுகளும் கை கோர்த்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி சாம்ராஜ்யத்தை சாய்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரியணையில் ஏற்றியிருக்கிறார் மமதா பானர்ஜி. ஆட்சிக்கு முன்பு மாவோயிஸ்டுகளுடன் கை கோர்த்த மமதா பானர்ஜி இப்போது மார்க்சிஸ்டுகளுடன் மாவோயிஸ்டுகளை இணைத்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இடதுசாரி தத்துவவாதி இல்லை என்றாலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மாநில உரிமைகள் போன்ற விவகாரங்களில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்தான் மமதா பானர்ஜியை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தார். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் சில்லறை வர்த்தகத்தை இந்தியாவுக்குள் குறிப்பாக கொல்கத்தாவில் நிலை நிறுத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஹிலாரியின் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த சில நாட்களுக்கு மமதா பானர்ஜியைப் பற்றிய சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டு அவரது நேர்காணலையும் பதிவு செய்திருந்தது.
அந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே வாழ்நாளெல்லாம் இடதுசாரிகளுக்கு எதிராகவே போராடி வரும் மமதாதான் இந்தியாவின் பொருளாதார தாரளமயமாக்கலுக்கும் முட்டுக்கட்டையாகவும் இருப்பவர் என்றும் ஒரு சிறிய மாநிலக் கட்சியின் தலைவர் என்றாலும் இந்தியப் பிரதமரை விட அதிக அதிகாரம் படைத்தவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த கட்டுரையில் மமதா அளித்த நேர்காணலில் இடம்பெற்றிருப்பதாவது:
நாங்கள் மார்க்சிஸ்ட்டும் அல்ல முதலாளித்துவவாதியும் அல்ல. நாங்கள் ஏழை எளிய மக்களுக்கானவர்கள். மக்களின் வாழ்கை மேம்பாட்டுக்கு எந்த கொள்கை உகந்ததோ அதுதான் எங்கள் கொள்கை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்னைக்கொல்ல சதி செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு வடகொரியா, வெனிசுலா, ஹங்கேரி போன்ற வெளிநாட்டு சக்திகள் நிதியுதவி அளித்துள்ளன. இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உதவுமாறு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் பேரம் நடந்துள்ளது.
இந்த சக்திகள் அனைத்தும் சேர்ந்து எனக்கு மரண தண்டனை விதித்துள்ளன. பேஸ் புக், இணைய தளம், இ-மெயில் வாயிலாக தினமும் என்னைப்பற்றி அவதூறு செய்திகளையும், போட்டோக்களையும், பொய்யான பெயர்களில் வெளியிட்டு வருகின்றனர் என்று அதில் மமதா கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக மமதா பானர்ஜி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்டுகள் என்று கூறிவரும் நிலையில் ஒருசர்வதேச சதி தமக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிறது என்று பெரிய குண்டையே போட்டுள்ளார்.
No comments:
Post a Comment