ஐபிஎல் 5 தொடரின் மூலம் இந்தியாவை பல இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இளம்வீரர்களின் மூலம் இந்திய அணியை சர்வதேச அளவில் இன்னும் பலம் கொண்டதாக மாற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 5 தொடர் கடந்த ஏப்ரல் 3ம் தேதி பெரும் கொண்டாட்டத்துடன் துவங்கியது. ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஆடியது.
மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் 5 தொடரில், லீக் போட்டிகளுடன் 5 அணிகள் விடைப்பெற்றன. பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறிய 4 அணிகளில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தகுதிச் சுற்றில் வெளியேறின.
இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. எதிரணியாக கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி களமிறங்க உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் 5 தொடரின் மூலம் இந்தியாவில் உள்ள பல உள்ளூர் இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் தங்களின் அக்கோரஷமான ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு வர தகுதி உள்ளவர்கள் என்று நிரூபித்துள்ளனர். சில வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் வீரர்களும் தங்களின் திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்:
ஐபிஎல் 5 தொடரில் பேட்ஸ்மேனான களமிறங்கிய இந்திய வீரர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பிர் சிறப்பாக ஆடிய ரன்களை குவித்தார். இந்திய அணியின் அனுபவ வீரரான இவர், தனது கேப்டன் பொறுப்பை சிறப்பாக வகித்தார். மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்ற இவர் 6 அரைசதம் அடித்து மொத்தம் 588 ரன்களை எடுத்தார்.
அதேபோல டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய ஷிகார் தவான் 15 போட்டிகளில் பங்கேற்று 5 அரைசதங்களை அடித்து 569 ரன்களை குவித்தார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் பந்துவீசி 3 விக்கெட்களையும் வீழ்த்துள்ளார். இவருக்கு இந்திய அணியி்ல் அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணியில் விரல் வி்ட்டு எண்ணும் எண்ணிக்கையில் வாய்ப்பு பெற்றவர் அஜின்கா ரஹானே. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய அவர் அதிரடியாக ஆடி, மொத்தம் 16 போட்டிகளில் 1 சதம் மற்றும் 3 அரைசதம் அடித்து 560 ரன்கள் குவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வலது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக ஆடியவர் மன்தீப் சிங். இவர் மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்று 432 ரன்களை குவித்தார். பகுதிநேர பந்துவீச்சாளரான இவர் 1 விக்கெட் வீழ்த்தினார்.
பந்துவீச்சாளர்கள்:
இந்திய பந்துவீச்சாளர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் களமிறங்கிய உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 17 போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியில் இளம்வீரராக வாய்ப்பு கிடைத்த உமேஷ் யாதவ் இன்னும் தனது பணியை தொடர வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் சில போட்டிகளில் பங்கேற்றுள்ள வினய் குமார், ஐபிஎல் 5 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரராக களமிறங்கினார். 15 போட்டிகளில் பங்கேற்ற வினய் குமார் 19 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக களமிறங்கிய பர்விந்தர் அவானா 12 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்களை வீழ்த்தினார். வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அவானா, பேட்டிங்கில் ஜொலிக்காதது அவருக்கு பின்னடைவு.
ஆல் ரவுண்டர்கள்:
இந்திய அணியில் சுழல்பந்துவீச்சாளரான அறிமுகமாகி சில போட்டிகளில் ஆடியுள்ள பியூஸ் சாவ்லா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான சாவ்லா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 106 ரன்களை எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு அறிமுகமாகி சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் ரவீந்தர ஜடேஜா. 18 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான அவர் 191 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே ஆடி வரும் இவர், தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய அணியில் ஏற்கனவே அறிமுகமாகி தற்போது வாய்ப்பின்றி தவிக்கும் இர்பான் பதான், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார். 17 போட்டிகளில் பங்கேற்ற இர்பான் பதான் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 176 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்ற நீண்டநாள் கேள்விக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறந்த பதிலை அளித்துள்ளது. இதுவரை வெளியே தெரியாமல் இருந்த பல இளம் வீரர்கள் தங்கள் திறமையின் மூலம் வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment