பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் மோடியை பங்கேற்க வைப்பதற்காக தேசியச் செயலர் பொறுப்பிலிருந்து சஞ்சய் ஜோஷி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருந்தார். அப்படி என்னதான் சஞ்சய் ஜோடிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தகராறு? என்பதுதான் பலரது கேள்வி.. இதில் ஆச்சரியம் என்னவெனில் இருவரும் குஜராத் மாநிலத்தில் பாஜகவின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்தவர்கள் என்பதுதான்...
சஞ்சய் ஜோஷி
மஹாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றியவர் சஞ்சய் ஜோஷி. 1988-89-ம் ஆண்டில் குஜராத்தின் அகமதாபாத்துக்கு ஜாகையை மாற்றிக் கொண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றுகிறார்.
1990-ம் ஆண்டு குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் நரேந்திர மோடி. அப்போது கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருதவர் சஞ்சய் ஜோஷி. இருவரும் 5 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றினர். இருவரும் இணைந்து பணியாற்றிய காலம் என்பது குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இதனால் 1995-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் தலைமையில் பாஜக முதல் முறையாக குஜராத்தில் ஆட்சியை அமைத்தது.
ஆனால் பாஜகவின் மற்றொரு தலைவரான சங்கர்சிங் வகேலா கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியதால் கட்சி கலகலக்கிறது. அப்போது மாநில அரசியலில் மோடியின் பங்களிப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. 1995-ம் ஆண்டு 117 இடங்களை பாஜக பெற்றபோது மோடி இருந்தார். மோடி டெல்லி அரசியலுக்கு இடம் மாற்றப்பட்ட நிலையிலும், அவர் இல்லாமலேயே குஜராத்தில் 1998-ம் ஆண்டில் 121இடங்களை பாஜக கைப்பற்றியது.
இந்த காலகட்டத்தில்தான் சஞ்சய் ஜோஷிக்கும் மோடிக்கும் இடையே முட்டல் ஏற்படத் தொடங்குகிறது. 1998-ல் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப மோடி விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் ஜோஷியோ இதை விரும்பவில்லை. அவரை மாநில அரசியலுக்கு வர விடாமல் தடுத்தார் ஜோஷி.
நரேந்திர மோடி
1998-ம் ஆண்டு குஜராத்தில் கேசுபாய் பட்டேல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது கேசுபாய் பட்டேலுக்கு எதிராக பாஜகவில் கலகக் குரல் எழுகிறது. மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய இடைத் தேர்தல்களில் ஆளும் பாஜக தோற்றுப் போக 2001-ல் மோடியை முதல்வராக்குகிறது பாஜக.
குஜராத் முதல்வராக மோடி பதவியேற்க சஞ்சய் ஜோஷியை டெல்லிக்கு அழைக்கிறது பாஜக மேலிடம். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்கிறார் சஞ்சய் ஜோஷி. அடுத்த சில ஆண்டுகளில் தமக்கான செல்வாக்கை மேலிடத்தில் வளர்த்துக் கொண்டு விஸ்வரூபமெடுக்கிறார் சஞ்சய் ஜோஷி.
ஆனால் 2005-ம் ஆண்டு சஞ்சய் ஜோஷிக்கு பலத்த அடி விழுகிறது. ஜோஷி ஒரு பெண்ணுடன் குஜாலாக இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய சிடி ஒன்று வெளியிடப்பட்டு கட்சிக்குள் அதிர்வலைகள் ஏற்படுகிறது. இதனால் கட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ஜோஷி. இந்த சிடி வெளியாக மோடியின் முகாம்தான் காரணம் என்று ஜோஷி கருதினார். இதனால் மோதல் மீண்டும் அதிகமானது.
பின்னர் குஜராத்துக்குத் திரும்பி முதல்வர் பதவியைப் பிடித்தார் மோடி. ஒருவழியாக ஜோஷியை கட்சியில் ஓரங்கட்டியாச்சு என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வலம் வந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்ற நிலைக்கும் உயர்ந்தார்.
ஆனால் மீண்டும் இப்போது மோடிக்கு குடைச்சலாக கேசுபாய் பட்டேல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அவருக்கு ஜோஷி ஆதரவும் தந்து வருகிறார்.
அதேபோல் சஞ்சய் ஜோஷியை அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராக கத்காரி முன்னிறுத்தினார். இதனால் செம கடுப்பில் இருந்த மோடி அந்த மாநில தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட செல்லவில்லை.
சஞ்சய் ஜோஷியை மீண்டும் முன்னிறுத்திய கோபத்தை தேசிய செயற் குழுவை வைத்து பகிரங்கப்படுத்தினார் மோடி.
வேறுவழியின்றி மோடிக்காக மீண்டும் ஒருமுறை ஜோஷியை செயற்குழுவில் இருந்து நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக. மோடியின் தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியின் முயற்சியால் ஜோஷியை இப்போது ஓரம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கத்காரி.
ஆனால், ஜோஷி-மோடி விவகாரம் இத்துடன் முடிந்துவிட்டதாக மட்டும் யாரும் நினைத்துவிட வேண்டாம்.
குஜாலா இருக்கிறதுன்னாஇன்னா சார்
ReplyDelete