பெரம்பூர் நட்டாள் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (26). இவர் மங்காத்தா, வல்லக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
தாயம், இதயம் ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகன், பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் குமார் வீட்டில் இருந்தபோது செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் திரு.வி.க. தெருவுக்கு வருமாறு அழைத்தனர். உடனே மனைவியிடம் சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் தனது நண்பர் வெல்டிங் ரவி என்பவரையும் ஏற்றிக் கொண்டார்.
திரு.வி.க. சந்திப்பில் ஆட்டோ ஸ்டேண்டு அருகில் அவரது மற்றொரு நண்பரான பைனான்சியர் ரமேஷ் நின்றிருந்தார். அங்கு குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது 3 பேர் குமாரை நோக்கி பாய்ந்து வந்தனர். அதில் ஒருவன் திடீர் என்று குமாரின் மார்பில் கத்தியால் குத்தினான். இன்னொருவன் முதுகில் குத்தினான். மற்றொருவன் கை, கழுத்து ஆகிய இடங்களில் குத்தினான்.
5 இடங்களில் குத்துப்பட்ட குமார் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கீழே சாய்ந்தார். உடனே 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். குற்றுயிராக கிடந்த குமாரை ரவியும், ரமேசும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் விஜயராகவன், செம்பியம் இன்ஸ்பெக்டர் கமீல் பாஷா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குமார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட குமாரின் நண்பர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது குமாரை சுற்றி வளைத்து குத்திக் கொன்றது ஆட்டோ டிரைவர்கள் தேவராஜ், ஜானி, மதுரை என தெரிய வந்தது. அவர்களைப் பிடிக்க இரவு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சிக்கவில்லை.
எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறா? அல்லது பெண் விவகாரமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரமேஷ் பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் யாராவது பணம் கொடுக்காமல் இழுத்தடித்தால் அவர் குமாரை வைத்து பண வசூலில் ஈடுபடுவது உண்டு என்று கூறப்படுகிறது. எனவே இதில் பாதிக்கப்பட்டதால் குத்திக் கொன்றார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
இதுபற்றி குமாரின் உறவினர் சீனிவாசன் கூறும்போது, குமார் சில சினிமா படங்களிலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வேகமாக முன்னேறி வந்தார். அதற்குள் அவருக்கு இந்த கதி ஏற்பட்டு விட்டது. குமாரை கும்பல் சுற்றி வளைத்து குத்திக் கொன்றபோது உடன் இருந்த நண்பர்கள் ரமேசும், ரவியும் தடுக்க முயற்சிக்காதது ஏன் என்பது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது இதுபற்றி அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்றார்.
ஆள் நடமாட்டம் இருந்த இரவு நேரத்தில் நடுரோட்டில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. தப்பி ஓடிய 3 ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
No comments:
Post a Comment