வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்திவிட்ட மத்திய அரசு அடுத்தபடியாக டீசல் விலையிலும் சமையல் கேஸ் விலையும் விரைவிலேயே 'கை' வைக்கவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் இவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.
ஆனால் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் டாலரின் அளவு அதிகரித்துவிட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்தக் கோரி மத்திய அரசிடம் அழுதபோதும், அரசியல் காரணங்களுக்காக விலையை அரசு உயர்த்த விடவில்லை. இப்போது, எண்ணெய் வாங்க காசு இல்லை என்ற நிலை உருவாகி வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியிருக்க வேண்டிய விலையை ஒரேயடியாக உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதில் பெட்ரோலின் விலையை உயர்த்தியாகிவிட்டது.
ஆனால், மத்திய அரசுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருவது டீசல், சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவை தான். ஒரு லிட்டரை டீசலை விற்றால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 7 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அதே போல ஒரு சமையல் சிலிண்டரை விற்றால் ஏற்படும் நஷ்டம் கிட்டத்தட்ட ரூ. 200 ஆகும். இந்த நஷ்டத்தில் முக்கால்வாசியை மத்திய அரசு மானியமாகத் தந்துவிடுகிறது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டமே. பெரும் நஷ்டம் தருவது மண்ணெண்ணெய் தான்.
இதையடுத்து இவற்றின் விலைகளையும் மத்திய அரசு விரைவிலேயே உயர்த்தவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விலைகளை நிர்ணயிக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருள் விவகாரத்துக்கான அமைச்சர்கள் குழுவில் திமுகவும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசும் இடம் பெற்றுள்ளன. இவர்களின் எதிர்ப்பால் டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்தக் கமிட்டியின் கூட்டம் நடந்தே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை இந்தக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டி விலை உயர்வு குறித்து ஆலோசிக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வருகின்றன. திமுக, திரிணமூல் ஏற்றால் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்.
அதே சமயம் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையில் கை வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. அவரை சமாதானப்படுத்தி விலையை உயர்த்த பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்து வருகிறார்.
இதனால் மண்ணெண்ணெய்யை மட்டும் விட்டுவிட்டு டீசல், கேஸ் விலைகளும் விரைவில் உயரலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment