கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதமாக கட்டிப் போட்டு வைத்திருந்த நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
அதிர்ஷ்ட சென்னை
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலுமே லீக் போட்டிகளில் தட்டுத் தடுமாறுவதும் அதிர்ஷ்டவசமாக தகுதிச் சுற்றில் நுழைந்து இறுதிப் போட்டியில் கோப்பையை தட்டுவதுமே ஒரு பாணியாக இருந்து வருகிறது.
நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரும் விதிவிலக்கு அல்ல. சென்னை அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறையப் பேர் இருக்க வலுவான அணியாகவே சென்னை சூப்பர்கிங்ஸ் இருந்து வருகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.
நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தமது வலுவை முழுவீச்சில் வெளிப்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவின் கவுதம் காம்பீர், சுனில் நரீன் ஆகியோர்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். பாலாஜி, காலிஸ், பாடியா என பெளலர்கள் படையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொண்டிருக்கிறது.
வலுவான கொல்கத்தா
கொல்கத்தா அணி ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த லீக் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்குகிறது.
இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.11 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.8 1/4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment