2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவனங்களின் அதிபர்களுக்கு டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த ஊழல் காரணமாக அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் ஏற்கனவே ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ஸார் குரூப் நிறுவன அதிபர்கள் ரவி ருயா, அன்ஷுமன் ருயா, இயக்குநர் விகாஷ் சராப் மற்றும் லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் ஐ.பி.கேதான், கிரண் கேதான் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி,டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, ரவி ருயா, அன்ஷுமன் ருயா உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment