ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்வது குறித்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
அகில இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து, பத்து ஆண்டுகளுக்குள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, கடந்த சில தினங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது, இடைக்கால உத்தரவு தான். சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின், இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கான கொள்கை, பயண ஏற்பாட்டாளர்கள், ஹஜ் கமிட்டி, சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்பே, உருவாக்கப்பட்டது. இந்த விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு ஹஜ் பயண ஏற்பாடுகளில், குறிப்பிடத் தக்க அளவில் மாற்றம் செய்யப்பட்டது. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியும் கூட, கடந்தாண்டை விட, இந்தாண்டு அதிகமானோர், பயணத்துக்கு விண்ணப்பித்தனர். இது மகிழ்ச்சியான விஷயம். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
No comments:
Post a Comment