மும்பையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி கலந்து கொண்ட கப்பல்படை ஆய்வு நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி என்ற முறையில், ஜனாதிபதி ஆண்டுதோறும் முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில், மும்பையில் கப்பல் படையின் ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கப்பல்படை கப்பல்கள், விமானங்கள் அணிவகுத்தன.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அலங்கரிக்கப்பட்ட கப்பலில் சென்று பிற கப்பல்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான செலவு விவரங்களை கேட்டு, தகவல் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு தாக்கல் செய்தார். அதற்கு கப்பல் படையின் தலைமையகம் பதில் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்து கொண்ட கப்பல் படை ஆய்வு நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ.23.24 கோடியாகும். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பராமரிப்பு, கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் கூரை ஆகியவற்றில் பெயிண்ட் அடித்தது - இந்த வகையில் மட்டும் ரூ.11.67 கோடி செலவிடப்பட்டது.
மறு சாலை அமைத்தல் மற்றும் ஆப்கான் சர்ச் முதல் ஆர்.சி. சர்ச் வரையிலான ரோட்டை சீரமைத்தல் இவற்றுக்காக ரூ.1.43 கோடி செலவு செய்யப்பட்டது.
வி.ஐ.பி.களுக்காக 30 சாப்பாட்டு மேஜைகள், 60 இருக்கைகள், புதிய மரச்சாமான்கள் ரூ.26.96 லட்சத்துக்கு வாங்கப்பட்டன. சாப்பாட்டுக்காக மட்டும் ரூ.17.57 லட்சம் செலவிடப்பட்டது.
ஜனாதிபதியின் கப்பல் படை ஆய்வில் 4 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 81 கப்பல்கள், கப்பல் படை மற்றும் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த விமானங்கள் பங்கேற்று அணிவகுத்தன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment