இந்தியா சிமெண்ட்ஸ் அதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சீனிவாசன் மீது அவரது மகன் அஸ்வின் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் அதிபராகவும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருப்பவர் என். சீனிவாசன். அவரது மகன் அஸ்வின் (48). அவர் ஓரின சேர்க்கை பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவி முகர்ஜி என்பவருடன் அஸ்வின் மும்பையில் குடித்தனம் நடத்தி வருகிறார். அவர்கள் இருவரும் கடந்த 1998 ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி மும்பையில் பார் ஒன்றில் தகராறு செய்ததாக அஸ்வினும், அவியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள அஸ்வின் தனது தந்தை மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
அவி முகர்ஜி பைலட்டாக இருந்தார். நான் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்த போது எனக்கும் அவி முகர்ஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். நாங்கள் இருவரும் 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் எனது தந்தை சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.
குறிப்பாக அவி முகர்ஜி மீதான என் காதலுக்கு பிறகு அவரது கொடுமைகள் அதிகமாகியுள்ளது. நாங்கள் உடலாலும் மனதாலும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளோம். 2002ம் ஆண்டு நாங்கள் சென்னைக்கு வந்த போது, எங்களை என் தந்தையின் ஆட்கள் கடத்திக் கொண்டு சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள்.
சமீபத்தில் மும்பை பாரில் நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடவில்லை. நானும் அவியும் பாரில் இருந்தபோது 12 போலீசார் திடிரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் அவியை கடுமையாகத் தாக்கினர். நான் சத்தம் போட்ட பின்பு எங்களை அவர்கள் கைது செய்து பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் எங்ளை தாக்கினார்கள்.
எனது தந்தையால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம். அவர் தனது என்.ஆர்.ஐ. அந்தஸ்தை முறைகேடாக பயன்படுத்தி நிதி முறைகேடுகளை செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் போது வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
அஸ்வின் புகார் குறித்து அவரது தந்தை சீனிவாசன் இதுவரை விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அஸ்வினின் இந்தப் புகாரால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment