பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வாழ்வா சாவா? பழிதீர்க்குமா தீர்க்காதா? என்ற கேள்விகளுடன் இன்று இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது அதிர்ஷ்டத்தில் அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று இரவுதான் போட்டியே தொடங்குகிறது...ஆனால் ஐ.பி.எல். நிர்வாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை...இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர்கிங்ஸ் வென்று பைனலுக்கே போய்விட்டது என்று ஐ.பி.எல். வெப்சைட்டில் போட்டுவிட்டனர்.
நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரானது சர்ச்சை மேல் சர்ச்சைகளால் ரணகளப்பட்டுப் போய் கிடக்கிறது. ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய வீரர்கள், மதுபோதையில் ஷாருக்கான் ரகளை, அமெரிக்கப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது, மும்பை போதை விருந்தில் கலந்து கொண்டது என சர்ச்சைகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கிறது ஐ.பி.எல்.
ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளையே நடத்த தடை விதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஐ.பி.எல். நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முக்கியமான போட்டிகளில் யார் வெல்வார்கள் என்று இப்போதே அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது.
இன்றைய மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் என்ன பாடுபடப்போகிறதோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை வென்று மே 25-ந் தேதி நடைபெற உள்ள போட்டியில் டெல்லி டேர்வில்ஸூடன் மோதப் போகிறதாம்..
அதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மே 27-ந் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளப் போகிறதாம்..
இப்படித்தான் ஐ.பி.எல். வெப்சைட்டில் போட்டிருக்கின்றனர். அடக் கொடுமையே என்கிறீர்களா?
இது உண்மையில் கவனக்குறைவால் போடப்பட்டதா? அல்லது சென்னைக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று ஜோசியம் பார்த்து போட்டார்களா? அல்லது இப்பொழுதே போட்டிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் மேட்ச் பிக்சிங் விளைவா? என்பது ஐ.பி.எல். நிர்வாகத்துக்குத்தான் வெளிச்சம்.
No comments:
Post a Comment