ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய முதல் பிளே ஆப் போட்டியில் 163 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தவித்தது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்களில் வெற்றிப் பெற்றது.
ஐபிஎல் 5 தொடரில் நேற்று பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் கேப்டன் கம்பிர் 16 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 32 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.
அதன்பிறகு காலிஸ், மெக்கல்லம் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. ஆனால் மெக்கல்லம் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 31 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் 1 ரன்களில் ஏமாற்றினார்.
பொறுப்பாக ஆடி வந்த காலிஸ் 30 ரன்கள் எடுத்து அதிரடிக்கு முயன்ற போது, பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு யூசுப் பதான், லட்சுமி சுக்லா ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
யூசுப் பதான் 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். லட்சுமி சுக்லா 11 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டன் ஷேவாக், டேவிட் வார்னர் ஜோடி அதிரடி துவக்கத்தை அளித்தது.
ஆனால் துவக்க வீரர் டேவிட் வார்னர் 1 சிக்ஸ் அடித்து 7 ரன்கள் எடுத்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் கேப்டன் ஷேவாக் 10 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லமிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பிறகு ஜெயவர்த்தனே, நாமன் ஓஜா ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். ஆனால் நாமன் ஓஜா 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 28 ரன்களை எடுத்து, கம்பிரிடம் கேட்சாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த ஜெயவர்த்தனே 40 ரன்கள் எடுத்து ஸ்டேம்பிங் செய்யப்பட்டார். கடைசிக் கட்டத்தில் சொதப்பிய வேணுகோபால் ராவ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஸ் டெய்லர், பாவன் நாகி ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு சிக்ஸ் அடித்து 11 ரன்களில் அவுட்டானார். சுனில் நரேன் பந்தில் பாவன் நாகியும் 14 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அடுத்த வந்து மோனி மார்கலும் டக் அவுட்டானார்.
இதனால் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் ஜாக் காலிஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினர்.
nice post
ReplyDeletecome to my blog www.suncnn.blogspot.com