பெங்களூரில் எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியர் காரில் கை, கால்கள் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி நுழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கிட்டத்தட்ட ராமஜெயம் உடல் கிடந்ததைப் போலவே இவரது உடலும் டேப்பால் கட்டப்பட்டுக் கிடந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (24), பெங்களூரில் ஐடிபிஎல் அருகே உள்ள எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒயிட்பீல்ட் அருகே உள்ள புரூக்பீல்ட் பகுதியில் எஇசிஎஸ் லே அவுட்டில் 6வது கிராசில் வசித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று காலை இவர் தனது வோல்க்ஸ்வேகன் போலோ காரின் பின் பகுதியில் பிணமாகக் கிடந்தார். முகம் 4 பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு, கழுத்தில் கவரோடு சேர்த்து பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டிருந்தது (பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் டக்ட் டேப்). கிட்டத்தட்ட 20 முறை இந்த டேப் கழுத்தில் சுற்றப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும்போதே முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி டேப்பை போட்டு சுற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காரில் இருந்து தப்பிவிடாமல் இருக்க, அவரது கையையும் காலையும் சுமார் 50 மீட்டர் டேப்பால் சுற்றிக் கட்டியுள்ளனர். பின்னர் அவரது உடலை காரின் சீட் மற்றும் பிற பகுதிகளோடு சேர்த்து தப்பவே முடியாத அளவுக்கு டேப்பால் கட்டிப் போட்டுள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாய்க்குள் துணி நுழைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கார் எஇசிஎஸ் லே-அவுட் அருகே உள்ள மாருதி லே-அவுட் பகுதியின் டி பிளாக் அருகே உள்ள ஏரியை ஒட்டிய பார்க் அருகே நின்றிருந்தது. அதாவது இவரது வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கார் நின்றிருந்தது.
காரின் டிக்கியில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தது. அந்த நீரில் தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்தது.
காலையில் அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கச் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு பொது மக்களுக்குத் தெரிவிக்கவே, போலீசாருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலில் இருந்த டேப்பை அகற்றவே போலீசாருக்கு 15 நிமிடம் பிடித்தது. அவ்வளவு சுற்று சுற்றப்பட்டிருந்தது.
ஸ்ரீராஜ் பணத்துக்காக கொலை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவரது பர்ஸ் மற்றும் விலை உயர்ந்த செல்போன் காருக்குள்ளேயே கிடந்தன. அவர் காருக்குள்ளேயோ அல்லது வீட்டிலேயோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். காரில் இருந்த விரல் ரேகைகளையும் டேப்பில் இருந்த ரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
தூக்க மாத்திரை கலந்த நீரை குடிக்க வைத்து, மயங்கிய பின், அவரது தலையை 4 பிளாஸ்டிக் கவர்களுக்குள் நுழைத்து டேப்பைப் போட்டு கட்டி, மூச்சுத் திணற வைத்து இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீராஜின் செல்போனை போலீசார் கைப்பற்றி, அதிலுள்ள எண்களை வைத்து விசாரணையைத் துவக்கியுள்ளனர். சிவாஜிநகர் பெளரிங் மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது.
4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் வந்த ஸ்ரீராஜ் முதலில் ஐபிஎம் நிறுவனத்திலும் பின்னர் எச்.பி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். ஓராண்டாக தனது நண்பர் விவேக் என்பவருடன் எஇசிஎஸ் லே-அவுட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு பன்னரகட்டா சாலையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய ஸ்ரீராஜ் பின்னர் மீண்டும் வெளியே சென்றார் என்று, அவரது ரூம் மேட்டான விவேக் கூறியுள்ளார். இந் நிலையில் தான் நேற்று காலை அவர் பிணமாகக் கிடந்தார்.
இதனால் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை ஸ்ரீராஜ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டதோடு திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளன. இதனால் ஸ்ரீராஜ் மனமுடைந்த நிலையில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
ராமஜெயமும் இதே போலத்தான் வாயில் துணி நுழைக்கப்பட்டு உடல் முழுக்க டேப்பால் சுற்றப்பட்டு கொலையாகிக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment