பெட்ரோல் உயர்வை வாபஸ் பெறக் கோரி வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
மத்தியில் அரசில் இருந்து கொண்டே மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துகிறார்களாம். அதாவது, தங்களை தாங்களே எதிர்த்துப் போராட்டம் நடத்துவது மாதிரி!.
வரும் 31ம் தேதி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜக பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக 30ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றியிலேயே இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருப்பதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. முன்னறிவிப்பு எதுவுமின்றி மக்களே அரசை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே ஆளுகின்ற அதிமுக அரசு ஏற்கனவே பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அடுக்கடுக்கான துன்பங்களை பொது மக்கள் தலையிலே சுமத்தி, அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசும் மேலும் ஒரு சுமையாக பெட்ரோல் விலையை உயர்த்தியிருக்கிறது.
பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் இந்திய நாட்டு மக்களை மேலும் வாட்டி வதைத்திடும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அடியோடு ரத்து செய்யாவிட்டாலும், பெருமளவுக்குக் குறைத்து மக்களுக்கு உதவிட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு
அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் இந்த விலை உயர்வினைச் செய்துள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கின்ற வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திடும் வகையிலும், வரும் 30-5-2012 அன்று காலை 10 மணி அளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும், கழகத் தோழர்கள் அனைவரும் இதிலே கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment