புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் இன்று சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை நிறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந் நிலையில் 1990ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வரும் ரவிச்சந்திரன் அவருக்குப் போட்டியாக சுயேச்சை வேட்பாளராக மனு செய்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராக இருந்த இவருக்கு கடந்த ஒன்றியக் கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிந்தது:
இந் நிலையில் இந்த இடைத் தேர்ததலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
இந்தத் தொகுதியில் அடுத்த மாதம் (ஜுன்) 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சீனிவாசன் உள்பட 24 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் 21 பேர் சுயேச்சைகள்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 28ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜுன் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 15ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில், அதிமுக-தேமுதிக இடையே இரு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலைப் போலவே இந்தத் தொகுதியிலும் அமைச்சர்கள் அனைவருமே கூண்டோடு முகாமிட்டு 'வேலை' பார்த்து வருகின்றனர்.
No comments:
Post a Comment