திருமணம் ஆகாமல் கோவில் கோவிலாக பரிகாரம் செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தமிழக சுற்றுலாத்துறையினர் திருமண பரிகார தலங்களுக்கு பேக்கேஜ் அமைத்து பரிகார பூஜைகளுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு சென்று சிறப்பு பரிகார பூஜைகளில் பங்கேற்கலாம்.
திருமணம் என்பது மனித வாழ்க்கையில் அவசியமான ஒன்று அனைவருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. காதலிப்பவர்கள் போராட்டங்களுக்கிடையே தங்கள் திருமணத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அதேசமயம் பெண் கிடைக்காமல் ஆணும், மாப்பிள்ளை கிடைக்காமல் பெண்ணும் ஆயிரக்கணக்கானோர் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஜோசியரிடம் சென்றால் அந்த கோவிலுக்குப் போங்க இந்த கோவிலுக்குப் போங்க என்று பரிகாரம் சொல்லுவார்கள். சிவனுக்கு மாலை மாத்திப்போடுங்க விஷ்ணுவுக்கு பரிவட்டம் கட்டுங்க என்பார்கள். தனியாக ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று பரிகாரம் சென்று திரும்புவதற்குள் செலவு பழுத்துவிடும்.
இந்த சிரமத்தைப் போக்கவே தமிழ்நாட்டில் உள்ள திருமண பரிகார தலங்களுக்கு பேக்கேஜ் டூர் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. திருமணமாகாமல் கவலைப்படுபவர்கள் இந்த சுற்றுலாவில் பங்கேற்று பரிகாரங்களை எளிதாக செய்யலாம்.
ஜூன் 1ம் தேதி முதல் வார விடுமுறை நாட்களில் இந்த சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்யலாம். இந்த சுற்றுலாவில் முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருவீழிமழிசை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தர்ரேஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், மற்றும் திருக்கருகாவூர் போன்ற தலங்களுக்கு சென்று பரிகாரம் பூஜை செய்யப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் மறுபடியும் கிளம்பிய இடத்திற்கு வந்து விடலாம்.
இந்த ஆலயங்களில் திருமணம் ஆகாதவர்கள் தங்கள் கழுத்தில் மாலையை அணிந்து அதை இறைவன் கழுத்தில் மாற்றிப் போட்டு பரிகார பூஜை செய்யப்படுகிறது. பின்னர் அந்த மாலையை வீட்டிற்கு எடுத்து வந்து பத்திரப்படுத்தி வைக்கவேண்டும். நல்ல முறையில் திருமணம் முடிந்த உடன் மீண்டும் அந்த தலங்களுக்குச் சென்று பரிகாரத்தை நிறைவேற்றலாம்.
தமிழக சுற்றுலாத்துறை அழைத்துச் செல்லும் அனைத்து கோவில்களும் பிரசித்தி பெற்றவை. திருவிடந்தை தலம் மகாபலிபுரம் அருகில் அமைந்துள்ளது. அங்கே விஷ்ணு நித்திய கல்யாண பெருமாளாக காட்சியளிக்கிறார். அதேபோல் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் அருளும் கோவிலாகும்.
இந்த பேக்கேஜ் சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு உணவு, தங்குமிடம் பரிகார செலவு சேர்த்து 2600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு தமிழக சுற்றுலாத்துறையை அணுகவும்.
very useful
ReplyDelete