பாஜவுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் கோஷ்டிப் பூசலை சமாளித்து எல்லாப் பேரும் ஒற்றுமையுடன் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொள்ள கட்சித் தலைவர் நிதின் கத்காரி கடுமையாக போராடிக் கொண்டுள்ள நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்துக் கடிதம் எழுதி கத்காரிக்கு டென்ஷனைக் கொடுத்துள்ளார் ராஜ்யசபா எம்.பியும், மூத்த தலைவருமான ராம் ஜேத்மலானி.
இதுகுறித்து ராம் ஜேத்மலானி கத்காரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சி ரொம்ப பலவீனமாக இருக்கிறது. கட்சி இப்படி கவலைக்கிடமான நிலையில் இருப்பதை நினைத்து நீங்களும் கவலையுடன் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
இதை விட மிகப் பெரிய பலவீனத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டு, அதன் ஊழலைக் கண்டு நீங்கள் பேசாமல் இருப்பதிலிருந்தே பாஜகவும் பலவீனமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
நாட்டுக்கு இப்போது விறுவிறுப்பான செயலாற்றக் கூடிய எதிர்க்கட்சியே தேவை. ஆனால் அதைச் செய்ய பாஜக தவறி வருகிறது. தலைவர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஒருவர் காலை மற்றவர் வாரி விடுவதில்தான் கவனமாக உள்ளனர். கட்சி செயலிழந்து போய் விட்டதோ என்று சந்தேகம் வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் பாதிப் பேர் சிறையில் இருக்க தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களைப் பற்றி நமது கட்சி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. மக்கள் எதிர்பார்ப்புக்கேற்ப நாம் செயல்படுவதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் ராம் ஜேத்மலானி.
மும்பையில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலேயே கோஷ்டிப் பூசல் பெரிதாக வெடித்தது. முதலில் மோடி வர மாட்டேன் என்றார். அவரை சமாதானப்படுத்த சஞ்சய் ஜோஷியை வெளியேற்ற வேண்டிய நிலை வந்தது. இதையடுத்து அத்வானியும், அவரது கோஷ்டியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜும் வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது ஜேத்மலானியின் விளாசல் கடிதம் பாஜக தலைமைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தக் கடிதம், தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எழுதப்பட்டதாகும்.
No comments:
Post a Comment