தமிழகத்தில் கடுமையான டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல் இல்லாததால் கனரக வாகனங்கள் ஆங்காங்கு நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட தொலைவு செல்லும் லாரிகள் வழியில் டீசல் இல்லாமல் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாளில் சரக்குகள் செல்லாததால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.டாக்சிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
மங்களூர், எண்ணூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் டீசல் உற்பத்தியை குறைத்ததே திடீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இந்த அளவுக்கு சப்ளை இல்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரும்பாலான பங்க்குகளில் ’டீசல் ஸ்டாக் இல்லை’ போர்டு வைத்துவிட்டு பங்க்குகளை மூடிவிட்டனர். டீசல் பற்றாக்குறையால் தனியார் பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அவர்களிடம் 3 நாட்களுக்குத் தேவையான ஸ்டாக் உள்ளது. அது தீர்ந்து சப்ளை வராவிட்டால் அரசு பேருந்து சேவையும் முடங்கும் அபாயம் உள்ளது.
மின்வெட்டை சமாளிக்க கைகொடுத்த ஜெனரேட்டர் இயக்கமும் டீசல் கிடைக்காததால் முடங்கி விட்டது. இதனால், தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளித் தொழில், கோவையில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குளுகுளு ஏசியில் இருக்கும் வணிக வளாகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கி வந்த கணிணி நிறுவனங்களுக்கும் இப்போது டீசல் பற்றாக்குறையால் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பும், வருவாய் பாதிப்பும் பலரை பாதித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், ’டீசலை பதுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பற்றாக்குறைக்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம். சேவை நிறுத்தத்திற்கான காரணத்தை எண்ணெய் நிறுவனங்கள்தான் விளக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment