அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்ததையடுத்து சன் டிவியின் லாபம் சுமார் ரூ. 50 கோடி சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் சன் டிவியின் லாபம் ரூ. 208.34 கோடியில் இருந்து ரூ. 159.03 கோடியாக சரிந்துள்ளது.
இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் அரசு கேபிள் டிவி வந்ததும், விளம்பர வருவாய் குறைந்ததும், சன் பிக்சர்ஸ் திரைப்பட பிரிவின் லாபம் குறைந்ததுமே ஆகும்.
கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சன் டிவியின் விளம்பர வருவாய் 9 சதவீதம் சரிந்து ரூ. 235 கோடி என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.
இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருப்பதாக சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணன் கூறியுள்ளார். முதலாவது அரசு கேபிள் டிவி அறிமுகமானது. இதன்மூலம் சன் டிவியின் வருவாய் ரூ. 77 கோடியும், லாபம் ரூ. 48 கோடியும் சரிந்துவிட்டது.
அடுத்ததாக கடந்த ஆண்டு ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தைத் தயாரித்ததன் மூலம் ரூ. 24 கோடி சன் டிவிக்கு லாபம் கிடைத்தது. ரூ. 132 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சன் டிவிக்கு ரூ. 179 கோடி வருமானத்தைத் தந்தது. இந்தப் படத்தை வைத்து ரூ. 47 கோடி வருவாயை ஈட்டிய சன் டிவிக்கு நிகர லாபமாக ரூ. 24 கோடி தேறியது.
ஆனால், இந்த ஆண்டு பெரிய படம் எதையும் சன் டிவி தயாரிக்கவில்லை. இந்த இரு காரணங்களால் லாபம் சரிந்துள்ளது.
அரசு கேபிள் டிவி வந்தது முதல் சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பல்வேறு தொலைக்காட்சிகளின் சிக்னல்களை ஏந்திச் செல்லும் சுமங்கலி கேபிள் விஷன் கட்டணத்தைவிட அரசு கேபிளில் கட்டணம் மிக மிகக் குறைவு. இதனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளை நாட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் அரசு கேபிள் டிவியில் சன் டிவியின் எந்த சேனலும் இடம் பெறாததும் அந்த நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சன் டிவியின் மார்க்கெட் ஷேர் சரிய ஆரம்பித்துள்ளது.
அரசு கேபிளில் சன் டிவி சேனல்களையும் சேர்க்கக் கோரி மாநில அரசுடன் அந்த நிறுவனம் தொடர்ந்து பேசி வந்தாலும், அரசியல் மோதலால் அது இன்னும் சாத்தியமாகவில்லை.
கடந்த ஆண்டு தமிழ் பொழுதுபோக்குப் பிரிவு சேனல்களில் (General entertainment channel - GEC) சன் டிவியின் மார்க்கெட் ஷேர் 69 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அது இப்போது 62 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் மிகச் சிறந்த நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மார்க்கெட் ஷேர் இரு மடங்காகியுள்ளது. கடந்த ஆண்டு 6.4 சதவீத பார்வையாளர்களைக் கொண்டிருந்த விஜய் டிவியின் ரசிகர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
அதே நேரத்தில் தேசிய அளவில் தமிழ் சேனல்களின் மார்க்கெட் ஷேர் 6.64 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 5.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கான காரணம், நீண்ட நேர மின் வெட்டுகள். இதனால் மக்கள் டிவி பார்ப்பது கூட 0.8 சதவீதம் குறைந்துவிட்டது.
இந் நிலையில் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் புதிய விதிமுறையை விரைவில் அமலாக்கவுள்ளது. இதனால் சன் டிவி உள்பட எல்லா டிவிக்களின் வருவாயும் மேலும் பாதிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் மொத்த வருவாயில் 63 சதவீதம் விளம்பரங்கள் மூலமே வருகிறது.
சன் டிவியின் பங்குகள் மதிப்பும் கடந்த ஓராண்டில் 34 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம், சிபிஐ-அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகள், திமுக ஆட்சி போனது, தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி போனது, அதிமுகவின் அரசு கேபிள், விளம்பர வருவாய் சரிவு, டிராய் போடவுள்ள கட்டுப்பாடுகள் என சன் டிவியின் முன் உள்ள சவால்கள் மிக மிக அதிகம்.
இந் நிலையில் டிடிஎச் சேவைகள் மீது 30 சதவீத வரி போடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment