பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் 'சேவா யாத்திரை' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.
நேற்று, பக்சார் மாவட்டத்தில் யாத்திரை சென்றார். சவ்சா என்ற கிராமத்தின் வழியாக அவர் செல்ல இருக்கிறார் என்பதை அறிந்த அந்த கிராம மக்கள், அவரை சந்திக்க சாலையில் திரண்டு நின்றனர். தங்களது ஊரில் நிலவும் குடி தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை ஆகியவை பற்றி அவரிடம் முறையிட அவர்கள் காத்து இருந்தனர்.
நிதிஷ்குமார் வந்ததும், அவரது காரை நிறுத்தும்படி பொதுமக்கள் மறித்தனர். ஆனால் அவரது காரும், அவருடன் வந்த அதிகாரிகளின் கார்களும் நிற்காமல் சென்றன.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சில கார்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஆனால், முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கார் எந்த சேதமும் இல்லாமல் பத்திரமாக சென்றது. ஆனாலும், கல்வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. ஆனால், இந்த கல்வீச்சு சம்பவத்தை டி.ஜி.பி. அபயானந்த் மறுத்தார்.
அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கார் சம்பவம் நடந்த கிராமத்துக்கு வந்தபொழுது, பொது மக்கள் அந்த காரை மறித்து முற்றுகையிட்டனர். முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் காரை விட்டு இறங்கி பொது மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டார். அவரிடம் கிராமவாசிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக கூறி விட்டு நிதிஷ் குமார் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும், அதிகாரிகளின் கார்களும் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு சிறுமி ஒரு போலீஸ் வாகனத்தின் மீது விளையாட்டாக ஒரு சிறிய கல்லை வீசினாள். அதில் அந்தக் காரின் கண்ணாடி உடைந்தது. மற்றபடி கல்வீச்சு தாக்குதலோ, வேறு எந்த அசம்பாவிதமோ நடக்க வில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment