ஐபிஎல் தொடரில் நேற்றைய 2வது பிளே ஆப் போட்டியில் 188 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, முடிவில் 38 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றின் அடுத்த போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் 5 தொடரின் பிளே ஆப் சுற்றின் 2வது போட்டி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் வழக்கம் போல தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்தார். குல்கர்னி வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் 1 ரன் மட்டுமே எடுத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் துணை கேப்டன் ரெய்னா டக் அவுட்டானார்.
அதன்பிறகு துவக்க வீரர் டேவிட் ஹஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த பத்ரிநாத் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். அதிரடியாக ஆடிய பத்ரிநாத் 39 பந்துகளில் 1 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
டேவிட் ஹஸ்ஸி 39 பந்துகளில் 1 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 49 ரன்கள் எடுத்து சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஜடேஜா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அதன்பிறகு வந்த டோணி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவருக்கு பிராவோ ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய இந்த ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் இமாலய உயர்வில் எட்ட உதவியது.
கேப்டன் டோணி 20 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 51 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய 14 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் 33 ரன்களை குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 187 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் குல்கர்னி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
188 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் சச்சின், ஸ்மித் ஜோடி சிறப்பான துவக்கம் அளித்தது. ஆனால் சச்சின் அழைக்கும் முன்பே ஸ்மித் ரன் ஓடி வர, சச்சின் கெளரமாக வெளியேறினார்.
அதன்பிறகு அதிரடியாக ஆடி வந்த ஸ்மித் 22 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 38 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்த நிலையில் மார்கல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பொறுப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 14 ரன்கள் எடுத்து டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் பரிதாப நிலையை மாற்ற அதிரடிக்கு முயன்ற ராயுடு 11 ரன்களில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஒரு சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்த ஜேம்ஸ் பிராங்க்ளின் 13 ரன்களில் டோணியிடம் கேட்சாகி வெளியேறினார். கேப்டன் ஹர்பஜன் சிங் 1 ரன்னில் ஏமாற்றினார். அதன்பிறகு அணியின் வெற்றிக்காக போராடிய போல்லார்டு 16 ரன்கள் எடுத்து ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் மலிங்காவும்(17) அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சென்னையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்க உள்ளது.
No comments:
Post a Comment