மக்கள் மீது பெட்ரோல் விலை உயர்வு குண்டை வீசி இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ள நிலையில் அடுத்து டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜூன் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உடனடியாக டீசல், காஸ் விலை உயர்வையும் மத்திய அரசு அறிவிப்பதாக இருந்தது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனமும், கொதிப்பும், கொந்தளிப்பும் கிளம்பியுள்ளதால் டீசல், காஸ் விலை உயர்வை தற்போதைக்குத் தள்ளி வைத்து ஜூன் மாதத்திற்கு அதைக் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என்று ஏற்கனவே பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தயாராகி விட்டது.
டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி மிகக் கடுமையாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணவீக்கம் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பைச் சந்திக்கும். அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி உள்ளிட்டவற்றின் விலை மிகப் பெரிய அளவில் உயரும் அபாயமும் உள்ளது. ஆனால் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணை நிறுவனங்களும், அரசுத் தரப்பும் கூறி வருகின்றன.
மே 31ம் தேதி பாரத் பந்த் நடத்த பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பந்த் முடிந்த பின்னர் டீசல் விலை உயர்வை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment