கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால். இவர் தமிழ், இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளை குவித்துள்ள இவர், இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாகவும் இருந்து வருகிறார். இவரது தாய் சாந்தகுமாரி மூளையில் ஏற்பட்ட அடைப்பால் மூன்று மாதமாக, சிகிச்சை பெற்று வருகிறார்.தாயின் அருகில் இருந்து கவனித்து வருகிறார் மோகன்லால். இந்நிலையில், கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, டி.பி.சந்திரசேகரன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மே 21 ல், தன், 52வது பிறந்த நாளை மோகன்லால் கொண்டாடவில்லை.
அதற்கு அவர், "த கம்ப்ளீட் ஆக்டர்' என்ற வலை தளத்தில், தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் தாயின் மனது துடிப்பதை என்னால் உணரமுடியும். சிறிய காயம்பட்டாலும், துடித்துப்போகும் என் தாயைப் போலத்தானே, உடலில் பல வெட்டுக்காயங்களை பெற்று கொலையான சந்திரசேகரனின் தாயின் மனதும் துடித்துப் போயிருக்கும்.
அந்தத் தாயின் கண்ணீர் கடலில், என் பிறந்தநாள் கொண்டாட்டம் மூழ்கி விட்டது. சந்திரசேகருடன் எனக்கு பழக்கமில்லை. இருந்தாலும், அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கிட்டத்தட்ட என்னுடைய வயது தான் அவருக்கும் இருந்திருக்கும். அவருடைய தாய்க்கும் எனது தாயின் வயது தான் இருக்கும்.கொலை செய்ய தூண்டுபவர்களும், கொலை செய்பவர்களும் அதிகரித்து வரும் கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக, கேரளா மாறி வருகிறதோ என, எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு மோகன்லால் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment