மே 14&ம் தேதி மீண்டும் வருவேன் என சத்ய சாய்பாபா, கூறியுள்ளார். எனவே அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று கூறி பெண் பக்தர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல், பிரசாந்தி நிலைய அரங்கத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாபாவுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா சமாதியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்ய மாதா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லஷ்மி சுவாமி என்ற 2 பெண்கள் நேற்று திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அமர்ந்தனர்.
சாய்பாபாவின் தீவிர பக்தையான சூர்யமாதா, “நான் தியானத்தில் இருக்கும்போது சாய்பாபா அடிக்கடி என்னுடன் பேசுவார்.
இது எனது கிராமத்தினர் அனைவருக்கும் தெரியும். ‘மே மாதம் 14&ம் தேதி மீண்டும் வருவேன், 96 வயது வரை வாழ்வேன், அதுவரை எனது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று என்னிடம் பாபா கூறினார். எனவே, சத்யசாய் அறக்கட்டளையும் ஆந்திர அரசும் இறுதிச் சடங்குகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட லஷ்மி கூறும்போது, “சாய்பாபா இறக்கவில்லை. அவர் திரும்ப வருவார்” என்றார். பெண்களின் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment