சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தியும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும், செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் முதலான சர்வதேச அமைப்புகளையும் அங்கே செயல்படவிடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போர் முடிந்ததற்குப் பிறகும் இலங்கை அரசு ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்து வருவதையும், தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தி வருவதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகவல்கள் வெளியுலகைச் சென்றடையாதவாறு ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் வெள்ளை வேன்களில் கடத்திக் கொலை செய்வதையும் ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்கவில்லை என்பதையும் தற்போது இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட ஓர் அமைப்புதான் என்பதனையும் ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை விசாரித்து அதற்குக் காரணமான ராஜபக்சே உள்ளிட்டவர்களைத் தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. அங்கு தமிழ் மக்கள் சமத்துவத்தோடு வாழ்வதற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஐ.நா. அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. அறிக்கையை குப்பையில் வீசுவோம் என்றும், அறிக்கைக்கு எதிராக தொழிலாளர் நாளான மே 1ஆம் தேதி பேரணியும் கடையடைப்பும் நடத்துவோம் என்றும் கூறிவரும் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தியும், ராஜபக்சேவுக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க இந்திய நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ராஜபக்சே கண்டனப் பேரணி நடத்தும் மே 1ஆம் நாளில் காலை 10 மணியளவில் சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment