ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.
தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.
எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.
தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபக்சேயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.
இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் கருணாநிதி அதை எதிர்ப்பாரா? அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா?
அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?
உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா? கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்’’ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment