இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 1ந் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடந்த போரின்போது அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதை ஐ.நா.சபை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ராஜபக்சேயின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததும், லட்சக்கணக்கானவர்களுக்கு உணவும், மருத்துவ உதவியும் மறுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
சொந்த நாட்டு மக்களையே, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொன்று குவித்த ராஜபக்சே போர்க்குற்றவாளி ஆக்கப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான முதல்கட்ட முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையை பெங்களூர் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது.
கொடுமைகள் நடைபெற்றபோது உலக நாடுகள் ஒதுங்கி நின்றதையும் ஐ.நா. குழு அறிக்கை எடுத்துக் கூறுகிறது. ராஜபக்சே மனித வரலாற்றில் மிகப்பெரிய கொடுமைகள் செய்ததற்காக அவருக்கு எதிராக ஐ.நா.சபை உறுதியான முடிவுகள் எடுக்க இந்தியா உட்பட பல நாடுகள் துணை நிற்க வேண்டும்.
அனைத்துலக நாடுகளின் குழு ஒன்று நடைபெற்ற கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் தீவிரமாக விசாரித்து இக்கொடுமைகளுக்கு காரணமான ராஜபக்சேவையும், அவரோடு துணை நின்றவர்களையும் போர்க்குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இந்த எண்ணத்தின் அடிப்படையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் கர்நாடக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறது. வருகிற மே 1ந் தேதி தொழிலாளர்கள் உரிமை நாளன்று (ஞாயிற்றுகிழமை) மாலை 4.30 மணிக்கு தமிழ்ச் சங்கத்தில் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கை குறித்து கர்நாடக தமிழர்கள் செய்ய வேண்டுவது பற்றி விரிவாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் மனிதம்' அமைப்பின் தலைவர் அக்னி சுப்பிரமணியம், திருச்சி வேலுச்சாமி மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற இருக்கிறார்கள். அதை தொடர்ந்து தமிழர்கள் மற்றும் மனிதநேய ஆர்வலர்களின் கையொப்பத்தை பெற்று அதை அமெரிக்கா மற்றும் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை தலைமை கழகத்தில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எனவே, கர்நாடக தமிழர்கள் மே 1ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment