சத்ய சாய்பாபா தனக்கு பின் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை, மேலும் அறக்கட்டளை தொடர்பாக உயில் எதுவும் எழுதிவைக்கவும் இல்லை என்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சாய்பாபா இறந்த பிறகு அறக்கட்டளை சொத்துக்களை உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சாய் அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் அளி்க்கும் வகையில் சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. சக்ரவர்த்தி, தொழிலதிபர் வேணு சீனிவாசன், பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர், சார்டட் அக்கௌண்டன்ட் நாகானந்த் ஆகியோர் பேசினர்.
பாபாவுக்கு பணிவிடை செய்பவர் தான் சத்யஜித். அவர் ஒன்றும் அறங்காவலரோ, வாரிசோ கிடையாது. பாபா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அறக்கட்டளையின் அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது, அறக்கட்டளை பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்த வாரம் கூடும் அறங்காவலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதாக வரும் செய்திகள் உண்மையில்லை. அவை அறப்பணிக்களுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாபா இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டி வாங்கியதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவர் இறந்த பிறகே அது பெங்களூரில் இருந்து வாங்கபப்ட்டது என்றனர்.
பாபா மருத்துவமனையில் இருந்தபோது அவருடைய உறவினர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவருடைய தம்பி மகன் ரத்னாகர் வன்மையாக மறுத்தார்.
பாபா மருத்துவமனையில் இருந்த 27 நாள்களும் தான் பாபாவுடன் இருந்ததாகவும், டாக்டர்கள் அனுமதித்த போதெல்லாம் அறக்கட்டளை உறுப்பினர்களும், பாபாவின் உறவினர்களும் வந்து பார்த்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் பாபாவே தனக்கு எந்த மருத்துவமனையில், எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மத்திய, மாநில அரசுத் தலைவர்கள் தங்களுக்கு அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment