முதல்வர் கருணாநிதியின் பேரன், முக அழகிரியின் மகன் என்று பந்தாவாகக் கூறி பலகோடி சுருட்டிய பலே இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த வாலிபர் சுகேஷ். மோசடிப் பேர்வழி. டிப்- டாப் உடையுடன் பெரிய இடத்துப் பிள்ளை போல சொகுசு காரில் உலா வருவார். இந்த பந்தாவைக் காட்டியே பெரிய தொகையை அபேஸ் செய்வது அவர் ஸ்டைல்.
இவரை நம்பி பல கோடி கொடுத்து ஏமாந்துள்ளனர் மக்கள். இவர் தன்னை முதல்வர் கருணாநிதியின் பேரன் என்றும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் என்றும் கூறி பலரை மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அரசின் ஒப்பந்தங்களைப் பெற முக அழகிரியின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவின் நெருங்கிய நண்பர் என்று சொல்லி பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1 கோடி கறந்துள்ளார் இந்த ஆசாமி.
இவர் தனது காரில் அமைச்சர்கள் ரேஞ்சுக்கு சுழல் விளக்கு பொருத்திக்கொண்டுதான் செல்வாராம். தமிழகம், கர்நாடக அரசுகளின் சின்னங்களையும் காரின் முன்பகுதியில் பொருத்தி இருப்பார். சில சமயம் பாதுகாவலர்கள் புடைசூழ வலம் வந்துள்ளார். போலீஸ் உடையிலும் சென்று ஏமாற்றியுள்ளார்.
சுகேஷ் பற்றி ஏராளமான புகார்கள் போலீசுக்கு வந்தன. ஆந்திராவிலும் இவர் பல மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து இவரை தமிழக, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில போலீசார் தேடி வந்தனர். சுகேசை பின் தொடர்ந்த பெங்களூர் போலீசார் சென்னையில் வைத்து 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
3 மாநிலங்களிலும் ஏராளமான பிரமுகர்கள், நிறுவனங்களில் ரூ.10 கோடியை சுகேஷ் சுருட்டியிருப்பதாக பெங்களூர் துணை கமிஷனர் ஜி. ரமேஷ் தெரிவித்தார்.
சுக்ஷுடமிருந்து சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கேனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் கருணாநிதியின் பேரன் என்று சொல்லி குறைந்த விலைக்கு சொகுசு கார் வாங்கித்தருவதாக சிலரிடம் ஏமாற்றினார் சுகேஷ். அப்போது அவர் சென்னை சேத்துப்பட்டு போலீசில் பிடிபட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் பழைய லீலையைத் தொடர்ந்துள்ளார்.
இவருக்கு ஒரு காதலி வேறு உண்டாம்.
பல் டாக்டரான அவர்தான் இந்த முறை சுகேஷ் பிடிபட உதவியாக இருந்தார் என்கிறார்கள் போலீசார்
No comments:
Post a Comment