மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது அமைச்சகமும் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் சீதாராம் யெச்சூரி புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் புதன்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவில் தாராம் யெச்சூரி மேலும் கூறியிருப்பது: மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மக்களை திசை திருப்பும் வகையில் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரம் தேர்தல் நடத்தை விதியை மீறிய வகையில் இருந்தது.
அதேபோல, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 24 அரசியல் படுகொலை நடந்துள்ளதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மக்களை திசை திருப்பும் நோக்கில் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டே இவ்வாறு தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி வன்முறை, ஆக்கிரமிப்பு போக்கில் செயல்படுகிறது என்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறவும் முயற்சித்துள்ளது.
அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு தேர்தல் நடத்தையை மீறும் வகையில அமைந்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். இதனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment