"காவலன்" படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற மே 14ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், "ஜெயம்" ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். படத்தில் பால்காரன் வேலுவாக வருகிறார் விஜய். இந்தபடம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. அந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாகவும், புதுவிதமாகவும் சொல்லியிருக்கிறார் டைரக்டர் ராஜா. இப்படத்தின் 80சதவீத சூட்டிங் முடிவடைந்த நிலையில், மீதி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக "சட்டபடி குற்றம்" படத்தின் ஆடியோ ரிலீசுக்கே ஜெயலலிதாவை, எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்தாராம். ஆனால் அப்போது தேர்தல் பிஸியில் இருந்ததால் மறுத்து விட்டாராம். கூடவே இன்னொரு விழாவில் நிச்சயம் பங்கேற்கிறேன் என்று உறுதியளித்தாராம். இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், "வேலாயுதம்" படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெ., கூறியதுபோல் நிச்சயம் "வேலாயுதம்" ஆடியோ விழாவில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க., தரப்பில் இருந்து இன்னும் உறுதியான தகவல் ஏதும் வரவில்லை.
No comments:
Post a Comment