முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பொன்னர் - சங்கர். நடிகர் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து, அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இப்படம் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார். அதில், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர் சங்கர் திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர் திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள், என்று கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
பொன்னர் சங்கருக்கு சில வாரங்கள் முன்பு நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ரீலிஸ் ஆனது. அந்த படத்தை ரீலிஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் ரொம்பவே திணறினார். அப்படியே கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரீலீஸ் ஆகி ஓரிரு நாட்களில் படத்தை தூக்கச் சொல்லி சிலர் நிர்பந்தித்தார்கள். இதேநிலைதால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டப்படி குற்றம் படத்திற்கும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய கதை, வசனத்தில் உருவான பொன்னர் - சங்கருக்கும் தியேட்டர் கிடைக்காத நிலைமையும், தியேட்டரில் இருந்து கட்டாயப்படுத்தி தூக்கி விட்ட நிலையும் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?
No comments:
Post a Comment