சத்ய சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த நித்யானந்தா தனது பாதுகாவர்களுடன் பந்தாவாக வந்ததால் அந்தப் பகுதியில் தேவையற்ற சலசலப்பு ஏற்பட்டது. தன்னை விவிஐபிக்கள் இருந்த வரிசையில் அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கும் சாய்பாபா உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், பீடாதிபதிகள் உள்பட பலர் வந்தனர். அவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வரிசையில் செல்வோர் சாய்பாபா உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்தலாம்.
சாதாரண பொதுமக்கள் பல மீட்டர் தூரம் தள்ளி நின்றுதான் உடலை பார்க்க முடியும். இந்நிலையில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி, கைதாகி இப்போது ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவும் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அவருடன் 4 பாதுகாவலர்களும் வந்தனர்.
பாதுகாவலர்கள் புடைசூழ அவர் அஞ்சலி செலுத்தச் சென்றார். விவிஐபிக்கள் இருந்த வரிசையில் தன்னை அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கு பாபாவின் ஊழியர்களும் உறவினர்களும் அனுமதி மறுத்துவிட்டனர். அவருடன் சென்ற பாதுகாவலர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரம் சாய்பாபா உடல் அருகே அஞ்சலி செலுத்திய நித்யானந்தா, வெளிய்றும் போதாவது விவிஐபி கேட் பக்கம் போக முயன்றார். ஆனால் அங்கும் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியேறும் வழியாகவே செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வேகமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
இதுகுறித்து சாய்பாபா பக்தர் ஒருவர் கூறும் போது, “சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகப் பெரிய தலைவர்கள் வந்தனர். அவர்கள் யாரும் தங்களுடன் பாதுகாவலர்களை பாபா உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லவில்லை.
ஆனால் நித்யானந்தா மட்டும் பாதுகாவலர்களுடன் உள்ளே சென்றது சரியல்ல. தன்னை அவர் விவிஐபி வரிசையில்தான் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. அவர் வந்ததை எந்த சாய் பக்தரும் விரும்பவில்லை. பாபாவின் உறவினர்கள் மிகப் பெரிய சங்கடத்துக்கு உள்ளாயினர் அவரது வருகையால்", என்றார்.
No comments:
Post a Comment