ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது விருப்பம் போல் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக் கொடி காட்டியதாகவே தெரிகிறது என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தனது வரைவு அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்கு குழுவின் விசாரணை வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் முறையான ஆலோசனைகளை வழங்கவில்லை. தவறு நடக்க இருப்பதை பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே அறிந்து சொல்ல தவறி விட்டதாகவும், அமைதியாக இருந்து நடந்த தவறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கருத வேண்டி உள்ளது.
அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சில பிரச்சனைகள் குறித்த தனது உண்மையான கவலைகளையும், அதே சமயத்தில் கண்டிப்பான சில ஆலோசனைகளையும் தெரிவித்து 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா அலட்சியப்படுத்திவிட்டார்.
உண்மைகளை மறைத்த ராசா:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்படி ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது பற்றி தொலைத்தொடர்பு கமிஷனோ அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ சிபாரிசு செய்யவில்லை என்றும் பிரதமருக்கு ஆ.ராசா தகவல் தெரிவித்ததன் மூலம் அவர் பாதி உண்மையை தெரிவித்து பாதி உண்மையை மறைத்திருக்கிறார். தனது நோக்கத்தை அவர் மறைத்து விட்டார். இதன் மூலம் அவர் பிரதமரை தவறாக வழி நடத்தி இருக்கிறார்.
இந்தப் பிரச்சனையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவது இல்லை என்று பிரதமர் அலுவலகம் முடிவு செய்ததன் மூலம் ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது விருப்பம் போல் அலைவரிசையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக்கொடி காட்டியதாகவே தெரிகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு சட்ட அமைச்சர் யோசனை தெரிவித்ததை பிரதமர் அலுவலகம் அறிந்திருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அப்படி குழு அமைப்பதை ராசா விரும்பவில்லை. இதனால்தான் அந்தக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில் பிரதமர் அலுவலகம் முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த தவறி, வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய குறிப்பில், அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மாற்றி அமைப்பது பற்றியும், புதிய வரைமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர், ராசாவுக்கு தவறான யோசனை எதுவும் வழங்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால் ராசா சில உண்மைகளை மறைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பற்றாக்குறை காரணமாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி தேதியை 2007ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி என்று நிர்ணயித்ததாக பிரதமருக்கு கடிதம் எழுதிய ராசா, மற்றொரு சந்தர்ப்பத்தில் சில புதிய நிறுவனங்களுக்கு போதிய அலைவரிசை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ப.சிதம்பரத்தின் அலட்சியம்:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த சில தகவல்கள் மிகவும் துரதிருஷ்டமானவை என்று பொதுக்கணக்கு குழு கருதுகிறது.
அரசு கஜானாவுக்கு பணத்தை கொண்டு வந்து அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் நிதியமைச்சர். அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டிய இடத்தில் இருந்த ப.சிதம்பரம், இது முடிந்து போன பிரச்சனை என்று விட்டு விடுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசு கஜானாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது அம்பலத்துக்கு வந்த பிறகு கூட பொருளாதார விவகார துறையின் செயலாளர் இந்த பிரச்சனையை மத்திய கேபினட் செயலாளரின் கவனத்துக்கோ அல்லது நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கோ கொண்டு செல்லத் தவறி விட்டார். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்திய போது அவர்களில் சிலர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தனர். சிலர் இந்த பிரச்சனையை முடிந்த விவகாரமாக கருதி மறந்து விடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கைக்கு திமுக, காங்கிரஸ் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் இந்த அறிக்கை குறித்து கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது.
21 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமாக எண்ணிக்கையில் உள்ளனர்.
No comments:
Post a Comment