காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என, ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
முதல் அமைச்சர் கலைஞரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன்,
இன்றைய தினம் முதல் அமைச்சர் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக தேர்தலை பொறுத்தவரையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, கலைஞர் ஆறாவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் 2ஜி விவகாரத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதா?
பதில்: காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. 2ஜி பிரச்சினையை பொறுத்தவரையில், அது உச்ச நீதிமன்றத்திலே தொடங்கி பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.
கேள்வி: தமிழக இளைஞர் காங்கிரசிலே பிரச்சினைகள் தங்கபாலு நீக்கம் போன்றவை குறித்து உங்களுடைய கருத்து?
பதில்: தமிழக இளைஞர் காங்கிரசார் பிரச்சினையை பொறுத்த வரையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்ததும், அது குறித்த அறிக்கை ராகுல்காந்தியிடம் அளிக்கப்பட்டு, அவர்தான் இறுதி முடிவு எடுப்பார். அதே போன்று, தங்கபாலு பிரச்சினையை பொறுத்த வரையில், கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்றார்.
No comments:
Post a Comment