ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காலையில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்த “ராணா” படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.
வீட்டுக்கு சென்றதும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சிகிச்சைக்கு பின் நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்.
இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்து இருந்தனர்.
ரஜினி ஓய்வு எடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு ஆஸ்பத்திரி முன் திரண்டனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகு நிம்மதியானார்கள்.
ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார். பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் போட்டு அழைப்பு விடுத்தார்.
இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றார். படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் கூறினார். ரஜினி ஓய்வு முடிந்த பிறகு படப்பிடிப்பை விறு விறுப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment