சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மாணவி சுரேகா. ஒரு தனியார் மருத்துவரின் தவறான சிகிச்சையால் கண்பார்வையை இழந்த மாணவி சுரேகா சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன் நிலையை எடுத்து சொன்னார்.
இதை கேட்ட மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மனம் உருகினர். மாணவிக்கு ஆறுதல் கூறி, `உன் சிகிச்சைக்கான முழு செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறிய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை முதலில் சென்னையிலும், பிறகு ஐதராபாத்துக்கும் அனுப்பி உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
ஐதராபாத்துக்கு செல்லும் முன்பு அப்போதே ஒரு முறை யாரிடமும் சொல்லாமல் திடீரென அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தார். தற்போது சென்னையிலேயே இருக்கும் மாணவி சுரேகாவுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கவும், பெங்களூரில் இருந்து அவ்வப்போது கண் சிகிச்சை நிபுணர்கள் வந்து சிகிச்சை அளிக்கவும் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அவரது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் மேயர் மா.சுப்பிரமணியன், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, ஆயிரம் விளக்கு தி.மு.க வேட்பாளரான இளைஞர் அணி துணை செயலாளர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் உடன் சென்றனர். மு.க.ஸ்டாலின் திடீரென வந்ததும், மாணவி சுரேகாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியால் திக்கு முக்காடி போய் விட்டனர். மாணவி சுரேகா மு.க.ஸ்டாலினிடம், `அங்கிள் உங்கள் உதவியை நான் என் வாழ்க்கையில் ஒரு போதும் மறக்க முடியாது.
நீங்கள் எனக்காக செலவு செய்வது மட்டுமல்லாமல், அவ்வப்போது வந்து என்னை நேரில் பார்ப்பதும், என் சிகிச்சை முறைகளை விசாரிப்பதும், அதற்காக விசேஷ ஏற்பாடுகளை செய்வதும் எங்களுக்கு பெருத்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். முன்பெல்லாம் என்னால் எதையும் பார்க்க முடியாது. இப்போது கிட்டவைத்து படிக்கவே முடிகிறது. இதோ பாருங்கள். நான் வரைந்த படங்கள்' என்று கூறி அவள் வரைந்த சில படங்களையும் மு.க.ஸ்டாலினிடம் காட்டினாள்.
அதை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் ரொம்ப நன்றாக வரைந்திருக்கிறாய், நீ இன்னும் முழுமையான கண் பார்வை பெற நான் எல்லா உதவிகளையும் செய்வேன் என்று கூறி தன்னுடன் வந்த அசன் முகமது ஜின்னாவிடம் அடிக்கடி சுரேகாவின் சிகிச்சை பற்றி கேட்டறிந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
ஏதோ ஒரு மாணவிக்கு உதவி செய்ய பண உதவி செய்ததோடு தன் கடமை முடிந்தது விட்டது என்று நினைக்காமல் அவ்வப்போது சிகிச்சை பற்றி கேட்டறிந்து, நேரில் வந்து பார்க்கும் மு.க.ஸ்டாலினை அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாராட்டி, மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment