ஒரே நாளில் எத்தனை பரபரப்பைதான் தாங்கிக் கொள்வார்கள் மக்கள். அதிலும் சினிமா ரசிகர்கள் பாடு நேற்று ரொம்பவே டென்ஷன். ஒரு புறம் ரஜினி மருத்துவமனையில் அனுமதி. இன்னொரு பக்கம் அஜீத் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக விடப்பட்ட அறிக்கை. என்னய்யா இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா இருக்கே என்று அலுத்துப்போய் உட்கார்ந்தால் இந்தா பூஸ்ட் என்பது மாதிரி ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயக்குனர் பாலசந்தருக்கு தாதா பால்கே சாகேப் விருது கொடுப்பதாக அறிவித்து தமிழ்சினிமாவை கவுரவித்தது மத்திய அரசு. இந்த அவசர அரைச்சலில், கட்டபுள்ள வடிவேலு ஒரு பக்கம் நின்று கொண்டு ராணாவாவது, காணாவாவது என்று பேட்டி கொடுக்க எந்த சேனலை திறந்தாலும் இந்த செய்திகள்தான்.
மருத்துவமனையில் ரஜினி அனுமதி என்றதுமே மயிலாப்பூரில் இருக்கும் இசபெல்லா மருத்துவமனையில் கூடிவிட்டார்கள் பத்திரிகையாளர்கள். அவரை பார்க்கணும். உள்ளே விடுங்க என்று அவர்கள் படுத்திய பாட்டில் மருத்துவமனை நிர்வாகத்திற்கே மூச்சு திணறியிருக்கும்.
அந்தளவுக்கு ரஜினியின் நாடியை பிடித்தாவது செக் பண்ணி விடும் அவசரத்தில் இருந்தது மீடியா. இவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல்தான் அவுட் பேஷன்ட்டாக இருக்க வேண்டிய ரஜினி, ஐசியூ வுக்குள் புகுந்து கொண்டார் என்றும் வதந்திகள் பரவியது. நல்லவேளையாக இரண்டு கேட் உண்டு இசபெல்லாவுக்கு. அதில் ஒரு கேட் வழியாக வீட்டுக்கு பறந்தார் ரஜினி.
அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும் தமிழக முதல்வர் கலைஞர் மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தவர் ரஜினிக்கு அஜீரண கோளாறு. அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறியதும்தான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் மீடியாவும் ரசிகர்களும்!
No comments:
Post a Comment