தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிப்போரில் 40,000 அப்பாவித் தமிழர்களை குண்டு வீசிக் கொன்று குவித்து இன அழிப்பு செயலில் ஈடுபட்டதாக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில் போர்க் குற்றம் புரிந்துள்ள ராஜபக்சேவை கண்டித்தும், அவரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தக் கோரியும் மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை முன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், நடந்த போராட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது வீரமணி பேசுகையில், உலகம் கண் திறந்துவிட்ட இந்த நேரத்தில் ஐ.நா.சபையே இப்படிப்பட்ட ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், கடந்த கால செயல்களுக்கு கழுவாய் தேட முயல வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்ற அந்த நிலையிலே செயல்பாட்டில் இறங்க வேண்டும். அந்த செயல்பாடு என்ன வென்றால், ஈழத் தமிழர்களுக்கு போர்க் குற்றவாளியாக இருக்கக் கூடியவர்களை கூண்டிலே ஏற்ற வேண்டும் என்று இந்திய அரசு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமையை பெறுவதற்கு தனி ஈழமே தீர்வு. ஒத்த கருத்துடைய அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்டமாக, தமிழ் ஈழ மாநாட்டையே நாங்கள் தமிழகத்தில் நடத்துவதற்கு யோசிப்போம் என்றார்.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு தண்டனை-மார்க்சிஸ்ட்:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் மீது தொடுத்த இறுதிக்கட்ட ஆயுத தாக்குதலில் (2008 செப்டம்பர் முதல் 2009 மே வரை) வன்னி பகுதியில் சுமார் 3,30,000 அப்பாவி தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றோர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையில் அப்பாவித் தமிழர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்தத்திற்குப் பிறகு ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.
ஆயுத மோதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற குழுவினர் மீதும், மருத்துவமனைகள் மீதும், ஐ.நா.சபை அலுவலகங்கள் மீதும். ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், நிவாரணம் வழங்கிடவும் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது.
தாக்குதலுக்கு ஆளாகி பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய தமிழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் இலங்கை ராணுவம் அனுமதிக்காத காரணத்தாலேயே உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
ஆயுத மோதலின்போது விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தியது, சிறுவர்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை ஐ.நா.குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டி இருப்பினும், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாகவே உரிமைக்காக போராடிய தமிழர்களும், அப்பாவி தமிழ் மக்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். இத்தகைய கொடிய மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். மனித உரிமைகளை மீறி, பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது மனித உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை செயல்படுத்தும் வகையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட, மத்திய அரசு தனது ராஜ்ய உறவை பயன்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், ஆயுத மோதல்கள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இன்னும் முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. சம உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளிலும் முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்கிடவும், நீண்ட காலமாக தீர்க்கப்படாத இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் இலங்கை அரசு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காண, இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்கள் அமைப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திடவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாக பயன்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment