ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அறிக்கையின்படி உடனே விசாரணை மேற்கொள்ள இந்தியா எந்த விதத்திலும் முட்டுக்கட்டையாக நிற்க கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐ.நா.வின் அறிக்கையைக் கிழித்தெறிந்து குப்பையில் போட வலியுறுத்தி ராஜபக்சே மே 1ஆம் தேதி கொழும்பில் போர்கோலம் பூணப்போகிறார். ஈழத் தமிழர்களை காப்பாற்றத்தான் முடியவில்லை. குறைந்த பட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவும், கூட்டாளிகளும் தண்டனையில் இருந்து தப்பிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ராஜபக்சே தண்டிக்கப்படவில்லை என்றால் மாண்டுபோன ஈழத்தமிழ் மக்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள்.
தமிழர்களின் நீண்ட கால தமிழ் ஈழ கனவும், அவர்கள் மறைந்தது போலவே மண்ணோடு மண்ணாகி போய்விடும். இனியும் ஒரு கணம் கூட காலம் தாழ்த்துவதற்கு தமிழ் மக்கள் இடம் அளித்துவிடக்கூடாது.
தமிழ்மக்கள் அனைவரும் ஓரணியில், ஓர் உணர்வில் திரள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.
ஜாதி, மத, இன, கட்சி வேறுபாடுகளை மறந்து 7 கோடி தமிழர்களும் தமிழர்களாக எழுவதற்கு இதுவே சிறந்த தருணம் ஆகும்.
ராஜபக்சேவை தண்டிக்க ஐ.நா. அறிக்கையின்படி உடனே விசாரணை மேற்கொள்ள இந்தியா எந்த விதத்திலும் முட்டுக்கட்டையாக நிற்க கூடாது. என எச்சரிக்கை செய்யவும், ஐ.நா.வின் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் தமிழர்களே வீதிக்கு வாருங்கள். இவ்வாறு கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment