'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.
கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.
மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.
கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.
இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலசந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்னேகம் மறக்க முடியாத ஒரு படைப்பாகும்.
அவர்கள், 47 நாட்கள், சிந்துபைரவி ஆகியவை பாலசந்தரின் மாபெரும் படைப்புகளாகும்.
No comments:
Post a Comment