நிபுணர்குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டு, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது என்று கைவிரித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.
சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலோ அல்லது உறுப்பு நாடுகள் அழைப்பு விடுத்தாலோ மட்டுமே சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை வெளிப்பட்ட பின்னர், நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“நிபுணர்குழு சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியான சுதந்திரமான அணைத்துலக விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் தன்னிச்சையாக விசாரணைக்குழுவை அமைக்க ஐ.நா பொதுச்செயலருக்கு அதிகாரங்கள் இல்லை.
சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன் அல்லது ஐ.நாவின் உறுப்புநாடுகள் அழைப்பு விடுத்தால் மட்டுமே அத்தகைய விசாரணக்குழுவை அமைக்க முடியும்.
இந்த அறிக்கை தொடர்பாகப் பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்பட்ட போதும் பதில் எதையும் அளிக்கவில்லை.
சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக- நியாயபூர்வமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நிபுணர்குழு அழைப்பு விடுத்தள்ளதற்கு பான் கீ மூன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் கடமை சிறிலங்காவுக்கே முதலில் உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.
அதேவேளை, நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கோபப்படும் தொனியில் சிறிலங்காவில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து பான் கீ மூன் விசனமடைந்துள்ளார்.
முழுமையான பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் சிறிலங்கா அரசும் மக்களும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கருதுகிறார்“ என அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நிபுணர் குழுவின் அறிக்கையுடன் ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த அறிக்கையை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ம் திகதி கையளிக்கப்பட்ட பின்னர் அது சிறிலங்கா அரசக்கு வழங்கப்பட்டு அதன் பதிலுக்கு காலஅவகாசம் வழங்கியதாகவும், கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் மீண்டும் இதுதொடர்பாக ஐ.நா கேட்டுக் கொண்ட போதும் இதுவரை சிறிலங்கா எந்தப் பதிலையும் வழங்கவில்லை என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவின் பணிகளுக்கு சிறிலங்கா தொடர்ந்தும் மதிப்பளிக்கும் என்றும், கொழும்பிலுள்ள ஐ.நாவினதும் அதன் முகவர் அமைப்புகளினதும் பணியாளர்களுக்கு சிறிலங்கா அரசு பாதுகாப்பு வழங்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு சிறிலங்காவின் ஒப்புதல் அல்லது அனைத்துலக அமைப்பின் உறுப்பு நாடு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கூறியுள்ள போதும், அது பாதுகாப்புச்சபையா அல்லது மனிதஉரிமைகள் பேரவையா என்று அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment