சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் 27.04.2011 அன்று நடைபெற்றது. பின்னர் திமுக தீர்மானம் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார்.
கேள்வி: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறதே?
பதில்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதா மீதான சொத்து சேர்ப்பு வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. அதற்கு அவர் கெடு மேல் கெடு கேட்டு தாமதித்துக் கொண்டு வருகிறார். அங்குள்ள உயர்நீதி மன்றத்தில் தடை வாங்குகிறார். இது நீடித்துக் கொண்டே போகிறது. மீண்டும் இந்தப் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அவர்கள் இறுதி முடிவு அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: சி.பி.ஐ. நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?
பதில்: இன்று நிறைவேற்றிய எங்கள் தீர்மானத்தில் இது பற்றி சொல்லி இருக்கிறோம்.
கேள்வி: இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?
பதில்: தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட சங்கடம் எங்களுக்கு ஏற்படாது. என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.
கேள்வி: இந்த வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பற்றி ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று கூறியிருக்கிறீர்களே?
பதில்: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகை படிப்பவர்கள், மாலை இரவு டி.வி.யை பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.
கேள்வி: இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். கனிமொழி முன் ஜாமீன் வாங்குவாரா?
பதில்: இப்போது அது பற்றி சொல்ல இயலாது. இந்த வழக்கில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.
கேள்வி: அடுத்த மாதம் 6 ந்தேதி ஆஜராக வேண்டும் என்ற சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுப்படி கனிமொழி ஆஜர் ஆவாரா?
பதில்: சட்டப்படி அவர் நடந்து கொள்வார். பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் ஜெயலலிதா இது வரை ஆஜராகவில்லை. உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லை.
கேள்வி: போபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. முறையாக செயல்படவில்லை என்ற கருத்து உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. நடந்து கொள்ளும் முறைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பழைய விவகாரங்களை கிளற விரும்பவில்லை.
கேள்வி: 87 வயதான உங்களுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. ஊடகங்களும், சில சதிகளும் உங்களை தலைமைப் பதவியில் இருந்து அகற்றி விடும் என்று நம்புகிறீர்களா?
பதில்: இயற்கை ஒன்றுதான் என்னை அகற்ற முடியும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment