தேர்தல் முடிவுக்கு முன், அனைத்து துறை அலுவலகங் களையும், புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிவிட வேண்டுமென்ற நோக்கோடு, தி.மு.க.,வின் செயல்பாடு அமைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே யான, "ஈகோ' பிரச்னையில் புதிய தலைமைச் செயலகம் சிக்கித் தவிக்கிறது.
முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நடந்த போது, புதிய தலைமைச் செயலகம், "ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டுக்குள்ளாகவே புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. மேற்கூரை, "டூம்' தயாராகாததால், கலை இயக்குனரை கொண்டு இரண்டரை கோடி ரூபாயில், அவசரமாக, "செட்- அப் டூம்' வடிவமைக்கப்பட்டது. இதன்பின், சட்டசபை முழுமையாக தயாராகமலேயே, திரைசீலை போட்டு மூடப்பட்டு, பிரதமர், சோனியா ஆகியோரைக் கொண்டு திறக்கப்பட்டு, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரும் நடந்த பின், மூடப்பட்டு, சட்டசபை வளாகம் அமைக்கும் பணி, அடுத்த கூட்டத் தொடர் வரை மேற்கொள்ளப்பட்டது. அதுவும், அவசர அவசரமாக முடிக்கப்பட்டு, கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஆனால், புதிய சட்டசபை துவக்கப்பட்ட பின், ஒரு நாள் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சபைக்கு வரவில்லை. அதேபோல, சட்டசபையில் பேசிய அ.தி.மு.க.,வினரும், "இது சர்க்கஸ் கூடாரம் போல உள்ளது' என, கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், பழைய சட்டசபை அவசரமாக, மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில், செம்மொழி நூலகம் அமைக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்து இருக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளும் அகற்றப்பட்டு, அடுத்து வேறு எந்த அரசு அமைந்தாலும் உடனடியாக அதை தயார் செய்ய முடியாத அளவுக்கு, மாற்றங்கள் செய்யப்பட்டன. அடுத்ததாக, இந்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களது அலுவலகங்கள் அவசரமாக தயார் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டன. இதனால், பழைய தலைமைச் செயலகத்தில் இருந்த அமைச்சர்களது அலுவலகங்களில் அனைத்து வசதிகளும் அகற்றப்பட்டு, அவை பூட்டப்பட்டன. இதன்பின், இந்த சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரும் முடிந்தது. அந்த சமயத்தில், சட்டசபை செயலகம் மட்டுமே, புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், ஒவ்வொரு துறைக்கான அலுவலகம் தயாரானதும், அந்த அலுவலகம் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், இங்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இவ்வளவும் அடுத்தடுத்து நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அடுத்து, ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த தலைமைச் செயலகத்தில் தான் அது செயல்பட வேண்டுமென தி.மு.க., விரும்புகிறது. இதன் மூலம் சரித்திரத்தில் முதல்வர் பெயர் இடம்பெற வேண்டுமென்பது ஆளுங்கட்சியின் கருத்தாக உள்ளது. இதற்காகவே, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இக்கட்டடத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதுவே, கோட்டையில் இருந்து துறைகளை அவசரமாக புதிய வளாகத்துக்கு மாற்றுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., தரப்போ, கருணாநிதிக்கு பெயர் பெற்றுத் தரும் இந்த புதிய வளாகத்தில் இயங்குவதை விரும்பவில்லை. சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "அடுத்து அம்மா தலைமையில் கோட்டையில் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும்' என்றார். தற்போது கோட்டையிலிருந்து துறைகள் அவசரமாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக, கோப்புகளை அழிக்க முயற்சிகள் நடப்பதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை கண்டித்து, முதல்வர் கருணாநிதி சார்பில், அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில், கோப்புகளை மாற்றுவதற்கு, அ.தி.மு.க., கவலை கொள்ளவில்லை. முக்கிய துறைகள் மாற்றப்பட்டால், அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி அமையும் பட்சத்தில், புதிய வளாகத்தில் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அதை தடுத்தாக வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், இரண்டு கட்சிகளின், "ஈகோ' பிரச்னையில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஆட்சியில், எதிர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருந்த போது, புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். அது பற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, "நன்றாக கட்டட்டும்; அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து அதில் ஜம்மென்று அமர்ந்து கொள்வோம்' என்றார். அதுபோல, ஜெயலலிதாவும், "புதிய தலைமைச் செயலகத்தில் வந்து அமருவோம்' என்று ஒரு வார்த்தை தெரிவித்து இருந்தால், இந்த அளவுக்கு துறைகளை மாற்றுவதில் வேகம் காட்டப்பட்டிருக்காது என்கிறது அதிகாரிகள் வட்டாரம்.
No comments:
Post a Comment