ராணா படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளன்றே பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக்கணும் என்று ரஜினி சார் ஆசைப்பட்டார். அதற்காகதான் படப்பிடிப்பு முடிந்ததும் பிரஸ்மீட் வைங்க என்றார். பட் அன்ஃபார்ட்சுநேட்லி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு என்று சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தார் கே.எஸ்.ரவிகுமார்.
ரஜினி பிரஸ்சை மீட் பண்ணி இருபது வருஷமாச்சு. இன்னைக்கும் மீட் பண்ண வேணாம் என்பதால்தான் இப்படி ஒரு ஸ்கீரின் பிளேயை பண்ணியிருக்கீங்களா என்று ஒரு மூத்த நிருபர் முதல் கேள்வியை வீச, சற்றே அதிர்ந்துதான் போனார் கே.எஸ்.ரவிகுமார். இல்லண்ணே... ஸ்கிரின் பிளேயெல்லாம் இல்ல. யாராவது இதுக்கு போய் ஸ்கிரீன் பிளே பண்ணுவாங்களா? கடந்த சில நாட்களாகவே அவருக்கு சரியான உறக்கம் இல்ல. நேற்று கூட தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அவரே போன் செய்து இந்த விழாவுக்கு வரச்சொல்லி நள்ளிரவு வரை பேசிக் கொண்டு இருந்தார். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்ல அவருக்கு தரப்பட்ட கூல் ட்ரிங்ஸ் ஒத்துக்கல. அவ்வளவுதான். அஜீரண கோளாறுக்காக செக்கப் பண்ணிட்டு அப்பவே வீட்டுக்கு போயிடாரு என்று நீண்ட பதிலளித்த கேஎஸ்.ரவிகுமார் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்கு தாவினார்.
நூறு கோடி பட்ஜெட், 220 நாட்களுக்கு குறையாமல் ஷூட்டிங். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ரஹ்மான் ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார். அதைதான் இன்று படம் பிடித்தோம். இந்த பாடலின் பாதியில் இருந்துதான் ரஜினியின் பகுதி வருகிறது. எனவே அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றெல்லாம் உருப்படியான விஷயங்களை கூறிவந்த கே.எஸ்.ரவிகுமாரிடம் பலரும் எதிர்பார்த்த அந்த கேள்வி எழுப்பப்பட்டது.
காலையில் ஒரு பேட்டியில் ராணாவாவது, காணாவாவது என்று கூறியிருக்கிறாரே வடிவேலு. அது பற்றி என்ன நினைக்கிறீங்க? இதுதான் கேள்வி. சட்டென்று உஷாரானார் ரவிகுமார். அப்படியா சொல்லியிருக்கார். எனக்கு தெரியலையே. சமீபகாலமாக அவரது வாய்மொழிதான் பரபரப்பா இருக்கு. வடிவேலு சொன்னார் என்பதற்காக கே.எஸ்.ரவிகுமார் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியுமா? நான் வேணும்னா அப்புறமா போன் பண்ணி கேட்கிறேன். என்ன பதில் சொன்னார்னு பிறகு உங்களுக்கு சொல்றேன் என்று அந்த கேள்விக்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment