முரளி மனோகர் ஜோஷி வெளிநடப்பு செய்ய, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான பொதுக் கணக்குக் குழு விசாரணை அறிக்கை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது. இதில்,. புதிய பிஏசியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பல கூத்துகள் அறங்கேறின.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை கடுமையாக குற்றம்சாட்டுவதோடு, பிரதமர் மன்மோகன் சிங்கையும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விமர்சிக்கும் பிஏசி வரைவு அறிக்கை புதன்கிழமை கசிந்தது.
பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷியால் தயாரிக்கப்பட்டு, அக்குழுவின் உறுப்பினர்களிடம் அளிக்கப்பட்ட வரைவு அறிக்கை ஊடகங்களில் கசிந்தது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், தமது அறிக்கை குறித்து விவாதிக்க, ஜோஷி தலைமையில் பொதுக்கணக்கு குழு இன்று டெல்லியில் கூடியது.
காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய, பிஏசி கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
ஒருகட்டத்தில், எதையும் சமாளிக்க முடியாமல் வெறுப்புற்றவராக முரளி மனோகர் ஜோஷி கூட்டத்த்தில் இருந்து கோபத்துடன் வெளிநடப்புச் செயதார்.
வீழ்த்தப்பட்டது அறிக்கை...
முரளி மனோகர் ஜோஷி வாக்களிக்காமலேயே வெளியேறிய நிலையில், பிஏசி அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் 9 பேர், பகுஜன் சமாஜ் வாடி மற்றும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து தலா ஒருவர் என 11 எம்.பி.க்கள் பிஏசி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால், மொத்தம் 21 பேர் கொண்ட குழுவில், பிஏசி அறிக்கை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது.
அதேநேரத்தில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் இணைந்து புதிய பிஏசி தலைவரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, காங்கிரஸ் எம்.பி. சயிஃபுதீன் சோஸ் புதிய பிஏசி தலைவரானார்.
பிஏசி அறிக்கை அடுக்கும் குற்றச்சாட்டுகள்...
பிரதமரின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்தியது, ஏலம் முறை குறித்த உண்மைகளை உள்நோக்கத்துடன் மறைத்தது, பிரதமரை தவறாக வழிநடத்தியது, விதிகள் பலவற்றை மீறியது, தன்னிச்சையாகவும் சட்ட விரோதமாகவும் செயல்பட்டது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள் பலவும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது தொடுத்திருந்தது, பிஏசி வரைவு அறிக்கை.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு முறையான ஆலோசனைகளை வழங்காதது, கண் முன் நடந்த தவறுகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது என பிரதமர் அலுவலகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ராசா தன் விருப்பம்போல் செயல்படுவதற்கு பச்சைக்கொடி காட்டியதாக பிரதமரையும் பிஏசி அறிக்கை விமர்சித்திருந்தது.
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்ட பிறகு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்காமல், இது முடிந்து போன பிரச்னை என்பதால் விட்டுவிடாலம் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக அப்போதைய நிதியமைச்சர் குறிப்பிட்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்று ப.சிதம்பரத்தையும் கடுமையாக சாடியிருந்தது பிஏசி அறிக்கை.
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த முறைகேடு குறித்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment