செக் மோசடி வழக்கில் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத ஜெயில் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவராமனின் மனைவி சொர்ணா. இவர் அண்ணன் ஒரு கோயில், மூன்று முடிச்சு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் முகுந்த் சந்த் போத்ரா என்ற சினிமா பைனான்சியரிடம் 1996 ம் ஆண்டில் 2 தவணைகளில் கடனாக ரூ.4.85 லட்சம் வாங்கினார். அதை திருப்பி தருவதற்காக கொடுத்த காசோலைகள் (செக்), சொர்ணாவின் கணக்கில் பணம் இல்லாததால் அவை திருப்பி அனுப்பப்பட்டு விட்டன.
இதுசம்பந்தமாக சென்னை 4 வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சொர்ணா மீது போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, 6 மாத ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபாரதத்தை சொர்ணாவுக்கு விதித்து தீர்ப்பளித்தார். ரூ.2 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்யவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சொர்ணா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை செசன்சு கோர்ட்டு, அவருக்கு மாஜிஸ்திரேட்டு விதித்த தண்டனையை 6 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக செசன்சு கோர்ட்டு குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சொர்ணா மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா அளித்த தீர்ப்பு வருமாறு:
ஜெயில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சொர்ணா தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் இந்த வழக்குக்கு பொருந்தாது. ரூ.2 லட்சத்தை உடனடியாக டெபாசிட் செய்தால்தான் ஜாமீனில் வெளிவர முடியும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதால் அதை சொர்ணா டெபாசிட் செய்தார்.
ஆனால் பாக்கியுள்ள ரூ.2.85 லட்சத்தை டெபாசிட் செய்ய செசன்சு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி அதை சொர்ணா இதுவரை செலுத்தவில்லை. எனவே சொர்ணாவுக்கு பெருந்தன்மை காட்டும் சூழல் எழவேயில்லை. அவருக்கு தண்டனை விதித்து கீழ் கோர்ட்டு சரியாகத்தான் தீர்ப்பளித்துள்ளது.
எனவே சொர்ணாவுக்கு 3 மாதங்கள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து செசன்சு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. பாக்கித்தொகை ரூ.2.85 லட்சத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் சொர்ணா டெபாசிட் செய்ய வேண்டும்.
ஜெயில் தண்டனையை அனுபவிப்பதற்காக சொர்ணாவை பிடிப்பதற்கு கீழ் கோர்ட்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சொர்ணா செலுத்திய ரூ.2 லட்சத்தையும், செலுத்தவுள்ள ரூ.2.85 லட்சத்தையும் போத்ரா பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment