இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி போர்க்குற்றம் புரிந்துள்ள ராஜபக்சே அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் ஈழ ஆதரவு மாநாடு விரைவில் தமிழகத்தில் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிப்போரில் அப்பாவித் தமிழர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை குண்டு வீசி கொன்று அழித்தாக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஐ.நா.சபை அறிக்கையின் படி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கி.வீரமணி,
உலகம் கண் திறந்துவிட்ட இந்த நேரத்தில் ஐ.நா.சபையே இப்படிப்பட்ட ஒரு போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், கடந்த கால செயல்களுக்கு கழுவாய் தேட முயல வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்ற அந்த நிலையிலே செயல்பாட்டில் இறங்க வேண்டும். அந்த செயல்பாடு என்ன வென்றால், ஈழத்தமிழர்களுக்கு போர்க்குற்றவாளியாக இருக்கக் கூடிய அவர்களை கூண்டிலே ஏற்ற வேண்டும் என்று இந்திய அரசு குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமையை பெறுவதற்கு தனி ஈழமே தீர்வு. ஒத்த கருத்துடைய அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்டமாக, தமிழ் ஈழ மாநாட்டையே நாங்கள் தமிழகத்தில் நடத்துவதற்கு யோசிப்போம். சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்றார்.
ராஜபக்சே உலக நீதிமன்றக் கூண்டில் ஏறுவது உறுதி என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசினார்.
No comments:
Post a Comment