தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:
"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.
தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.
இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.
இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.
கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.
இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.
முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.
கேரளாவில்...
கேரள தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இடதுசாரி கூட்டணி 45 முகல் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 வரையிலான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அஸ்ஸாமில் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இரண்டுமே சமபலத்தில் உள்ளன. இங்கு ஆட்சியை நிர்ணயிக்கப் போவது பாஜகதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment